பனியன் தொழில் நகரமான திருப்பூரில் பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று முதல் சுறுசுறுப்புடன் பனியன் நிறுவனங்கள் இயங்கும் என எதிர்பார்த்த தொழில் துறையினருக்கு வெளிமாவட்ட தொழிலாளர்கள் பொங்கல் விடுமுறை முடித்து இன்னும் திருப்பூர் திரும்பாத காரணத்தால் தொழில் துறையினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
திருப்பூரில் உள்நாடு மற்றும் ஏற்றுமதி பனியன் தயாரிப்பு மற்றும் அதை சார்ந்த தொழில்களான நிட்டிங், பிரின்டிங் டையிங், எம்ராய்டரி என பல்வேறு வகை ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகிறது இந்நிறுவனங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்ட தொழிலாளர்கள் சுமார் 8 லட்சம் பேர் பணிபுரிகின்றனர் கடந்த 14ஆம் தேதி போகி பண்டிகையுடன் துவங்கிய பொங்கல் திருவிழா 17 வரை கொண்டாடப்பட்டது.
இதற்காக கடந்த 13ஆம் தேதி முதல் பனியன் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது வெளிமாவட்ட தொழிலாளர்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாட சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர் தொழிலாளர்களும் தொழில்முனைவோரும் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு நேற்று முதல் பின்னலாடை நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை துவக்கியது இருப்பினும் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் சுமார் 40 சதவீதத்திற்கும் மேல் திருப்பூர் திரும்பாத நிலையில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பனியன் தொழில் நிறுவனங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
பெரும்பாலான நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்களை வைத்து தங்கள் உற்பத்தியை துவங்கியுள்ள நிலையில் வெளி மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்ற தொழிலாளர்கள் விரைவில் ஊர் திரும்ப வேண்டும் என தொழில் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து தொழில் துறையினர் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்காக கடந்த 13ஆம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது தொடர்ந்து இன்று (நேற்று) முதல் உற்பத்தியை துவக்கி உள்ள நிலையில் தங்கள் சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பணிக்கு இன்னும் திரும்பவில்லை சுமார் 50 முதல் 60 சதவீதம் தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகை முடிந்து திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள தொழிலாளர்கள் ஓரிரு நாட்களில் திரும்பினால் மட்டுமே எடுத்த ஆர்டர்களை உரிய நேரத்தில் முடிக்க முடியும் அதேபோல் தற்போது கோடை காலத்திற்கான ஆர்டர்களும் வர துவங்கியுள்ள நிலையில் விடுமுறையில் சென்ற தொழிலாளர்கள் விரைந்து வந்தால் மட்டுமே புதிய ஆர்டர்களை தைரியமாக பெற்று உற்பத்தியை தொடர முடியும் எனவே பொங்கல் பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊருக்கு சென்ற பனியன் தொழிலாளர்கள் உடனடியாக ஊர் திரும்ப வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.