போதை மாத்திரை வாங்குவதற்காக செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள்

சென்னையில் போதை மாத்திரை வாங்குவதற்காக செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 9 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் ராகேஷ் என்ற ஐ‌டி நிறுவன ஊழியரை கடந்த பத்தாம் தேதி தாக்கிய 6 பேர் கொண்ட கும்பல் அவரது கைபேசியை பறித்து சென்றது.

 

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது இதே கும்பல் டி நகரிலும் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது, இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் அவர்களே டிக்டாக்வீடியோ வெளியிட்டு சிக்கிக் கொண்டுள்ளனர். அதன்மூலம் கைபேசி பறிப்பு கொள்ளையர்களை அடையாளம் கண்ட காவல்துறை அவர்களை கைது செய்தது.

 

பிடிபட்ட 9 பேரும் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள். 16 மற்றும் 17 வயது சிறுவர்களான இவர்கள் போதை மாத்திரைக்கு அடிமையானதால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள் .குழுவாக பிரியும் 9 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று கைபேசி பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீநகரில் இருந்து செங்குன்றம் வரை செல்லும் இவர்கள் தொடர் வழிப்பறியில் ஈடுபடுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கைபேசியை பறித்து கடைகளில் விற்கும் சிறுவர்கள் பெரும்பாலும் பணத்திற்கு பதில் போதை மாத்திரைகளை பெற்றதாக சொல்லப்படுகிறது.

 

சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை வினியோகம் செய்தது யார் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Leave a Reply