ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தர்பார்.இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார். அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று படம் வெளியாகும் என அறிவித்ததை தொடர்ந்து தர்பார் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. கோவையில் தர்பார் படம் 25 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் என்பதை தொடர்ந்து நள்ளிரவு முதலே படம் வெளியாகும் திரையரங்கு முன் ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர்.
அதிகாலை 4 மணிக்கு படம் திரையிடப்பட்டது. திரையரங்கு முன் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா,தர்சனா இரு திரையரங்கிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. படம் பார்த்து விட்டு வந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது குறித்து மகளிர் அணி நிர்வாகி முத்துலட்சுமி பேசுகையில்,ரஜினி தனது இந்த வயதிலும் இளம் ரசிகர்களுக்கு சவால் விடும் வகையில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளதாகவும்,இந்த தர்பார் படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ரஜினி மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் ஷரீப்,பாபு,அபு,ரவி,அக்கீம்,ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.