பிரசவத்தின்போது பஞ்சு வைத்து தைத்ததாக புகார்! பெண் பலி!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திற்கு அருகே பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் பஞ்சு வைத்து தைக்கப்பட்டதால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

 

ஆலடியை அடுத்த கலர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், பிரியா தம்பதிக்கு கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. நான்கு நாட்கள் அங்கேயே சிகிச்சை பெற்று வந்த பிரியாவுக்கு கடந்த 31ஆம் தேதி உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

 

மேலும் வயிறு வீக்கத்துடன் இருந்ததால் அவரது உறவினர்கள் பிரியாவை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அறுவை சிகிச்சை மூலம் பிரியாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் சிகிச்சையின்போது பழைய துணி மற்றும் பஞ்சு வயிற்றில் வைத்து தைத்ததே காரணம் என்று பிரியாவின் உறவினர்கள் விருத்தாச்சலம் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 

தகவலறிந்து வந்த விருதாச்சலம் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரியாவின் இறப்புக்கு காரணமான மருத்துவர் மற்றும் செவிலியர் தங்கள் தவறை ஒப்புக்கொள்ள வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதியளிக்க வேண்டும் எனக்கூறி காவல்துறை மற்றும் வருவாய் துறையினரிடம் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

புகார் அளித்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.


Leave a Reply