24 மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்த மோப்பநாய் அர்ஜூனுக்கு பாராட்டு
சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தவரை மோப்பநாய் உதவியோடு 24 மணி நேரத்தில் காவலர்கள் கைது செய்தனர். சென்னை ஐஸ்ஹவுஸில் ஆள் இல்லாதபோது கார்த்திக் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து 14 சவரன் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தியது. அண்மைக்காலங்களில் கொலை கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் காணப் பெரிதும் உதவுபவை சிசிடிவி கேமராவும் செல்போனுமே, ஆனால் ஐஸ்ஹவுஸ் கொள்ளை வழக்கில் வேறு ஒருவரின் உதவியுடன் குற்றவாளியை பிடித்திருக்கிறது காவல்துறை.
அர்ஜுன் என்ற மோப்பநாய் தான் உதவியது. கொள்ளை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்த அர்ஜூன் சிறிது தூரம் ஓடியது. ஒரு இடத்தில் நின்று அது அங்கிருந்த வீட்டை பார்த்து நீண்ட நேரம் குறைத்துள்ளது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒருவரின் நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அவர் பெயர் சதீஷ் என்பதும், அரும்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது ஐஸ்ஹிவுஸில் உள்ள தமது நண்பர் வீட்டில் தங்கியிருந்து கொள்ளைகளில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த வீட்டை பார்த்து தான் மோப்பநாய் அர்ஜுன் குறைத்துள்ளது. கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 7 சவரன் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர்.
கொள்ளையனை விரைந்து பிடித்த தனிப்படை காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் அவர்களுக்கு வெகுமதி வழங்கினார். இந்த வழக்கில் தனது மோப்ப சக்தியால் கொள்ளையனை அடையாளம் காட்டிய அர்ஜூன் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




