ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நானே உரிமையாளர்

ஜெயலலிதா மறைந்த பிறகு கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களுக்கு தானே உரிமையாளர் என வருமான வரித் துறையிடம் சசிகலா விளக்கமளித்துள்ளார்.

 

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 1911 கோடி ரூபாய் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட சசிகலா 237 கோடி ரூபாயை கிறிஸ்டி நிறுவனத்திற்கு வட்டியில்லா கடனாக கொடுத்தது தெரியவந்தது.

 

இதையடுத்து 1911 கோடியே 50 லட்சம் ரூபாயை வருமானவரிக் கணக்கில் சசிகலா காட்டாதது ஏன் என வருமான வரித்துறையினர் சசிகலாவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சசிகலா தன் மீதான குற்றச்சாட்டுகள் முழுமையையும் மறுத்துள்ளார்.

 

மேலும் ஜே பார்ம் ஹவுஸ், ஜே ஹச் ஹவுசிங் டெவலப்மென்ட், ரியல் எஸ்டேட் மற்றும் க்ரீன் ஃபார்ம், கொடநாடு எஸ்டேட் ராயல் போன்ற நிறுவனங்களில் ஜெயலலிதாவுடன் இணைந்து பங்குதாரராக இருந்தது குறித்து விளக்கமளித்துள்ளார்.

 

ஜெயலலிதா மறைந்து விட்டதால் மேற்கண்ட அனைத்திற்கும் தானே முழு உரிமையாளர் என கூறியுள்ள சசிகலா ஜெயா பிரிண்டர்ஸ் நமது எம்ஜிஆர் நிறுவனத்திற்கும் தானே உரிமையாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply