குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் பேரணி சென்ற விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எட்டாயிரம் பேர் மீது எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் செயல்படுதல், அத்துமீறல் மற்றும் சென்னை நகர காவல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன. குடியுரிமை சட்டத்தில் திருத்தத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் ஆதி தமிழர் கட்சியின் சார்பாக ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
கட்டபொம்மன் சிலையில் இருந்து பேரணியாக சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தை கைவிட மறுத்து சாலையில் அமர்ந்த ஆதி தமிழர் கட்சியினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் புதிய பேருந்து நிலையம் அருகே இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 3000 இஸ்லாமிய பெண்கள் உட்பட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்று இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முழக்கமிட்டனர்.