3 பெண்களுக்கு கூட்டு பாலியல் துன்புறுத்தல்

காஞ்சிபுரத்தில் 3 பெண்களை 14 பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தபோது அங்கு பாதிக்கப்பட்ட பெண்களை அவமரியாதை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

மகளிர் சுய உதவிக்குழு மூலம் வேளாண்மை நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற மூன்று பெண்கள் கடனை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளது ஒரு கும்பல். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவை சேர்ந்த 3 பெண்கள் வேளாண்மை நிதி நிறுவனத்திடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

 

பின்னர் கடன் தொகையை அவர்கள் அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சுய உதவி குழு கடன் குறித்து பேச வேண்டும் எனக் கூறி மூன்று பெண்களையும் வேளாண்மை தற்சார்பு நிறுவன உறுப்பினர் செல்வி என்பவர் காட்டு பங்களாவுக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. அங்கு என்ன நடந்தது என்பதை பாதிக்கப்பட்ட பெண்ணை கண்கலங்கி கூறுகிறார்.

 

காவலர் ஆப் குறித்து அறியாத இந்தப் பெண்கள் இக்கட்டான சூழலில் காவல் நிலையத்திற்கு போன் செய்து உள்ளனர். ஆனால் இது எங்கள் எல்லை இல்லை என கூறி உதவி செய்ய மறுத்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன் அடித்து, உதைத்து பத்திரத்தில் கையெழுத்து பெற்ற பின்னரே தங்களை விடுவித்ததாகவும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றபோது காவலர்கள் தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தியதாக்கவும் அந்தப் பெண்கள் கண்ணீர் மல்க கூறினார்.

 

இறுதியாக பாதிக்கப்பட்ட பெண்களின் புகார் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் மதுராந்தகம் காவல்துறையினர் வேளாண்மை தற்சார்பு நிறுவனத்தின் நிறுவனர், ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

 

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்து அலைக்கழிக்கப்பட்டதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனிடம் கேட்டபோது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக கூறினார்.


Leave a Reply