--- --:--:-- --

மதுபோதைக்கு அடிமையான தந்தையால் 9 வயது சிறுமிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

8.8

மதுபோதைக்கு அடிமையான தந்தையால் 9 வயது சிறுமிக்கு நிகழ்ந்துள்ள கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்ற ஆசிரியரால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கூகுலூரை சேர்ந்த 30 வயதான குமார் இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவியும், 7 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பேபி கணவரை பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வருகின்றார். பிள்ளைகள் இருவரும் குமார் உடனே வசித்துவந்தனர்.

 

மதுபோதைக்கு அடிமையான குமார் குழந்தைகள் இருவரையும் சரிவர கவனிக்காமல், பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தமக்கு மது வாங்கி தரும் நண்பர்களை குமார் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பிள்ளைகள் முன்னிலையில் மது அருந்துவதை பழக்கமாக வைத்திருந்தார் குமார்.

 

இந்தநிலையில் வழக்கம்போல குமார் தமது நண்பர்கள் அருணாச்சலம், மைலான் ஆகியோரை இரவு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். குழந்தைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருக்க மூவரும் அங்கேயே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர்தான் அரங்கேறியது அந்த கொடூரம்.

போதையின் உச்சத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை அருணாசலமும்,மைலானும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் சிறுமி சோர்வாக வீட்டில் படுத்துக் கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் இதுகுறித்து குழந்தைகளிடம் விசாரித்துள்ளனர்.

 

தமக்கு உடல்நிலை சரியில்லை என சிறுமி கூறியுள்ளார். பின்னர் சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக அவரது ஆசிரியர் அங்கு வந்துள்ளார். சோர்வாக இருந்த சிறுமியிடம் ஆசிரியர் விசாரித்தபோதுதான் தமக்கு நேர்ந்த கொடூரத்தை அவர் விளக்கியுள்ளார்.

 

இதனையடுத்து ஆசிரியர் அளித்த தகவலின் அடிப்படையில் சிறுமியை குழந்தைகள் உதவி மையத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அருணாச்சலம்,மைலான் உடந்தையாக இருந்த தந்தை குமார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அருணாசலத்தை கைது செய்தனர்.

 

தலைமறைவாக உள்ள சிறுமியின் தந்தை குமார், மைலான் ஆகிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போதைக்கு அடிமையான தந்தையின் நண்பர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon