ஃபேஸ்புக் பயனாளர்களின் கவனத்திற்கு…!

26 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தான் கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு செயலி.

 

பயனாளர்கள் பலரும் தங்களது தனிப்பட்ட விபரங்கள் பலவற்றை இதில் பகிர்ந்து கொள்கின்றனர். பேஸ்புக்கிலிருந்து பயனர்களின் தகவல்களை திருடப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

 

அந்தவகையில் கம்பெரிடெக் என்ற தளத்தை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கடந்த 2ம் தேதி சுமார் 26 கோடி பேஸ்புக் பயனாளர்களின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிட்ட இணைய தள பக்கத்தில் கிடைத்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஹேக்கர்கள் தீவிரமாக இயங்கும் தளம் ஒன்றிலும் இந்த தகவல்கள் எளிதில் பதிவிறக்கம் செய்யும் வகையில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

 

ஆனால் தற்போது அந்த இணையதள பக்கமே நீக்கப்பட்டு இருக்கிறது. எனினும் அதற்கு முன்பாகவே இந்த தகவல்கள் அனைத்தும் பலருக்கும் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

 

ஏற்கனவே ஃபேஸ்புக் தகவல்கள் திருடப்படுவதாகவும், விளம்பர மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக விற்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு தகவல் திருட்டு நடந்திருக்கிறது. வியட்நாமில் இருக்கும் ஹேக்கர்கள் ஃபேஸ்புக் தகவல் தரவு தளத்தில் ஊடுருவி இந்த தகவல்களை பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

பெரும்பாலும் அமெரிக்காவை சேர்ந்த ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களே திருடப்பட்டுள்ளன.
குறிப்பாக பேஸ்புக் ப்ரொபைல் செட்டிங்கில் பப்ளிக் என வைத்திருப்பவர்களின் தரவுகள் எளிதில் திருடப்படுவதாக தெரிகிறது. எனவே ஃபேஸ்புக் பயனாளர்கள் ப்ரொபைல் செட்டிங்கில் நண்பர்களுடன் மட்டுமே தகவல் தெரியும் வகையில் மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .

 

அதேபோல பேஸ்புக்கை தவிர பிற தளங்களில் ப்ரோபைலை இணைக்கலாமா என்ற கேள்விக்கு நோ என்றே பதில் கொடுக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய வகையில் வரும் தகவல்களை பார்க்க வேண்டாம் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. ஃபேஸ்புக் பயனாளர்கள் அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றவேண்டும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


Leave a Reply