குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா நகரில் பள்ளிவாசல் கூட்டமைப்பினர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 32 பள்ளிவாசல்களை சேர்ந்த ஏராளமானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சசின் ஜமாத்துடன் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து கைகளில் கருப்பு பட்டை அணிந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூகநீதி மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை தடுத்து காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் அமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தினார்.