அந்தக் கனவை விடாமல் விரட்டுவேன்… ரவிசாஸ்திரி

கடந்த சில நாட்களாக கிரிக்கெட் உலகில் ரவிசாஸ்திரி தான் டாக் ஆஃப் டவுன். இந்திய அணி மீது வீசப்படும் பல கண்டனங்களுக்கு அவர் ஒளிவு மறைவில்லாமல் பதிலளித்து வருகிறார்.

 

கிரிக்கெட் விளையாட்டிலிருந்து சில மாதங்களாக ஒதுங்கியிருந்து வரும் தோனி குறித்து மனம் திறந்து சில விஷயங்களை சமீபத்தில் பேசியிருந்தார் ரவிசாஸ்திரி. தோனி இடைவெளி எடுத்துக் கொண்டது விவேகமானது என்றும் அவர் மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாட தொடங்கும் காலத்தை நான் விரும்பி எதிர்பார்க்கிறேன் என்றும் ரவிசாஸ்திரி பேசி இருந்தது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.

 

இந்நிலையில் கிரிக்கெட்டில் இந்திய அணி இந்த நூற்றாண்டின் சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ரவிசாஸ்திரி. மேலும் இந்திய அணி மீது வீசப்படும் அடுக்கடுக்கான சர்ச்சை கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளார். ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் தனக்கு மிகப்பெரிய ஆவேசம் இருக்கிறது என்றும் அந்த கனவை அடைய இந்திய அணி வீரர்களுடன் இணைந்து விடாமல் விரட்டி வருவதாகவும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதில்லை என்பது கிரிக்கெட் ரசிகர்கள் முன்வைத்து வரும் காட்டமான விமர்சனம். குறிப்பாக தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியின் பயிற்சிகளின் கீழ் இந்தியா 3 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளது.

2015 உலகக் கோப்பை மற்றும் 2016 டி20 உலகக் கோப்பை மற்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை என்பவை அதில் அடங்கும். இங்கிலாந்து உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறிய இந்தியா பின் போட்டியில் இருந்து வெளியேறியது.

 

ரவிசாஸ்திரி இந்தியா டுடேவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் நான் வெற்றியான மனிதன், 1983 இல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் நமது அணி வெற்றிக்கு நான் ஒரு பகுதியாக இருந்தேன், மேலும் 1985இல் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் அணி வென்ற போது ஒரு பகுதியாக நானிருந்தேன். நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருந்த இந்திய அணிக்கு நான் பயிற்சியாளராக மூன்று ஆண்டுகள் இருந்திருக்கிறேன்.

 

இதையும் நான் வெல்ல விரும்புகிறேன். இனிமேல் எனது அணியுடன் சேர்ந்து ஐசிசி உலகக் கோப்பையை கைப்பற்றும் கனவை விடாமல் விரட்டுவேன் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் எனக்கு ஒரு ஆவேசம். எனது அணியுடன் நான் இணைந்து அதை துரத்த போகிறேன் இந்த அணி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் உலக கிரிக்கெட்டில் நூற்றாண்டின் சிறந்த அணிகளில் ஒன்றாக நிற்கும் என்று ரவிசாஸ்திரி வாக்குறுதி அளித்துள்ளார்.

 

ரவிசாஸ்திரி சொன்ன இந்த கருத்தும் இதே பிரச்சினை குறித்து கேப்டன் விராட் கோலி கூறிய கருத்து முற்றிலும் மாறுபட்டு உள்ளன. எங்களுக்கு பெரிய போட்டிகளிலும் பெரிய தொடர்களிலும் வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. மேலும் எங்களால் முடிந்தவரை முயற்சியை கொடுக்க விரும்புகிறோம். ஆனால் வெற்றி, எண்ணிக்கை மற்றும் முடிவு என்ற அடிப்படையான விஷயங்களில் மட்டுமே நீங்கள் கவனம் செலுத்தினால் நீங்கள் செயல்பாட்டை ரசிக்க மாட்டீர்கள் என்று தெரிவித்துள்ளார்.


Leave a Reply