தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் அண்ணா சாலை, சைதாப்பேட்டை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதேபோல் நாகை, காரைக்கால், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்திற்கு கிடைக்க கூடிய சராசரி மழை அளவு 44 சென்டிமீட்டர் என்ற அளவை ஓரிரு நாட்களில் எட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.