மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திமுக எதிர்ப்பது ஏன்? என்பதற்கு புதுமையாக வீடியோ பதிவு மூலம் விளக்கமளித்துள்ளார் மு.க.ஸ்டாலின் .
நாட்டில் என்ன பிரச்னை என்றாலும் அதற்கு எதிர்ப்போ, ஆதரவோ, கண்டனம் தெரிவிப்பதோ என்றால் நீண்ட அறிக்கை வெளியிடுவது தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வழக்கம். அதே போல் வாழ்த்துச் செய்தி போன்றவற்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுவதையும் சமீப காலமாக வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிராக மே.வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெரும் கலவரமும், வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் இம்மசோதாவிற்கு தெரிவித்துள்ளதுடன், எதிர்க்கட்சிகள் ஆளும் மே.வங்கம், கேரளா, பஞ்சாப், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் திமுகவும் இந்த மசோதாவை ஆரம்பம் முதலே கடுமையாக எதிர்க்கிறது. சிறுபான்மை முஸ்லீம்கள் மற்றும் இலங்கையிலிருந்து இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளவர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் உள்ளதாகக் கூறி, தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணிக்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தில் மசோதாவுக்கு எதிராகவும் திமுக வாக்களித்த நிலையில், அதிமுகவோ இச்சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித் துள்ளது. பாமகவும் ஆதரவாக வாக்களித்த நிலையில், பாஜகவுடனான கூட்டணி தர்மத்திற்காக ஆதரவளித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கமும் அளித்துள்ளார்.
இதனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவகாரத்தில், தமிழகத்தில் திமுக, அதிமுக இடையே சூடான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்? என்பது குறித்து விளக்கமாக கூறி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
வழக்கமான நீண்ட அறிக்கை வெளியிடும் மு.க.ஸ்டாலின், கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய முகப்பில் அமர்ந்து பேசுவது போல் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.