மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இரண்டாவது நாளாக வன்முறைகள் நேற்றும் தொடர்ந்தன. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறைகள் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் மேற்குவங்காளத்தில் கலவர நிகழ்வுகள் பரவலாக நடந்து கொண்டுள்ளன.
கலவரங்கள் தொடர்வதால் மேற்கு வங்காளத்தில் பல பகுதிகளில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தோம்ஜுர் பகுதியில் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சூறையாடப்பட்டன. சுமார் 25 அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
சில பகுதிகளில் வன்முறையாளர்கள் மீது தடியடி நடத்தி, காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையில் பொது மக்கள் அமைதி காக்குமாறு அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் கவலை தருவதாக ஆளுநர் ஜெகதீப் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் வன்முறைகள் தொடர்ந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உத்தரவிட கோரிக்கை விடுக்க போவதாக பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. பாஜக தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா இதை தெரிவித்தார்.
வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மம்தா பானர்ஜி வேடிக்கை பார்ப்பதாகவும், சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார். வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவிய இஸ்லாமியர்கள் தான் இப்போராட்டங்களை நடத்தி வருவதாகவும் சின்ஹா தெரிவித்தார்.