லாக்கரை உடைக்காமல் படுக்கை அறையில் இருந்த சாவியை எடுத்து திருடிய கொள்ளையர்கள்

சேலத்தில் பிரபல நகைக்கடை அதிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ஒன்றரை கிலோ தங்கம், பணம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சேலம் குரங்குசாவடி பகுதியில் நகை கடை உரிமையாளர் வாசுதேவன் வசித்து வருகிறார்.

 

இவரது வீட்டு காவலாளி அதிகாலை 4 மணி அளவில் காலை பூஜைக்காக வீட்டின் பின்னிருக்கும் தோட்டத்தில் பூ பறிக்க சென்றிருந்தார். அப்போது முகத்தை கைக்குட்டையால் கட்டியிருந்த இரு மர்ம நபர்கள் அந்தக் காவலாளியை தள்ளிவிட்டு விட்டு வீட்டிலிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

 

அதிர்ச்சி அடைந்த காவலாளி இது குறித்து வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்து வீட்டை சோதனை செய்த போது லாக்கரில் இருந்த சுமார் ஒன்றரை கிலோ தங்கம், 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

 

கொள்ளையர்கள் லாக்கரை உடைக்காமல் படுக்கை அறையில் இருந்த சாவியை எடுத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

அதனடிப்படையில் அங்கு வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமரா பதிவில் இரண்டு மர்ம நபர்கள் தப்பி செல்லும் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Leave a Reply