நித்யானந்தாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் இரு இளம்பெண்கள் அமெரிக்காவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த தமது இரண்டு மகள்கள் கடத்தப்பட்டதாக ஜனார்த்தன சர்மா என்பவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் மீட்டு ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டனர். இந்நிலையில் ஜனார்த்தனா ஷர்மாவின் மகள்கள் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தாங்கள் அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தாங்கள் தந்தையுடன் செல்ல விரும்பவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தந்தை ஜனார்த்தன சர்மாவால் இருவருக்கும் ஆபத்து இருப்பதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் நீதிமன்றம் விரும்பினால் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நித்தியானந்தா கரீபியன் தீவுகளில் பதுங்கி இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் தற்பொழுது ஜனார்த்தனா ஷர்மாவின் மகள்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பதாக தெரிவித்திருப்பது காவல்துறை விசாரணையில் முன்னேற்றம் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.