தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் குறைவு!
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறைவாக நிகழ்ந்துள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
2015 முதல் 2017ஆம் ஆண்டுகள் வரை குற்றச் சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டிலேயே மத்திய பிரதேச மாநிலத்தில் தான் அதிக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காலகட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் பெண்களில் 4 ஆயிரத்து 976 பேர் வீதம் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு உள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் நாட்டின் தலைநகர் டெல்லியில் 1870 பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் சத்தீஸ்கர், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இதேபோல் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறைவாக நிகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
2015 முதல் 2017ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 342 பெண்கள் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு உள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆறு பெண்களும், நாகலாந்தில் 24 பெண்களும், குஜராத்தில் 657 பெண்களும் பீஹாரில் 888 பெண்களும் பாதிப்புக்குள்ளானதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரியவந்துள்ளது.
இதேபோல் மற்றொரு ஆய்வில் உலக அளவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்துள்ள நாடுகளின் பட்டியலில் தென்ஆப்பிரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




