பஞ்சாயத்து தலைவர் பதவிகளையும் குறிவைக்கும் அதிமுக..!! முக்கிய புள்ளிகளுக்கு அமைச்சர்கள் வலை..!!

தமிழகம் முழுவதும் பஞ்சாயத்து தலைவர் பதவிகளையும் கைப்பற்றி விட அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக பக்காவாக பிளான் போட்டு, ஒவ்வொரு ஊரிலும் மக்கள் செல்வாக்கு மிக்க அதிமுக பிரமுகர்களை நிறுத்தும் முயற்சிகளில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதி உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு வரும் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத்தாக்கலும் ஜரூராக நடைபெற்று வருகிறது. தற்போது தேர்தல் நடைபெறும் பதவி இடங்களில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டுமே அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட முடியும். பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பற்ற முறையில் சுயேட்சையாகத் தான் போட்டியிட முடியும். சுயேட்சை சின்னம் தான் ஒதுக்கப்படும். இந்த நடைமுறை தான் உள்ளாட்சித் தேர்தலில் காலம் காலமாக நடந்து வருகிறது.

 

இப்போதும் அதே முறையில் தான் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தேர்தல் நடக்க உள்ளது. ஊர், ஊருக்கு நான், நீ என பலரும் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆளும் அதிமுக தரப்பில், இந்த பஞ்சாயத்து தலைவர் பதவிகளையும், தமிழகம் முழுக்க தங்கள் கட்சியினரே கைப்பற்ற வேண்டும் என அதிமுக மேலிடத்தரப்பில் ஒரு பக்கா பிளான் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதாவது, ஒவ்வொரு ஊரிலும் அதிமுக கரை வேட்டி கட்டிய, மக்கள் செல்வாக்கு பெற்ற நபர்களை, சுயேட்சை சின்னம் தான் என்றாலும் கட்சி வேட்பாளர் போல் நிறுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே இந்தத் திட்டம். இதற்கான அசைன்மென்ட் சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கட்சி சார்பில் நிறுத்தப்பட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதுடன், தேர்தல் செலவுக்கான தொகையையும் அமைச்சர்களே வழங்க வேண்டும் என்பதும் மேலிடத்து உத்தரவாம்.

வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில், தொலைநோக்குப் பார்வையில் இந்தத் திட்டம் போடப்பட்டுள்ளதாம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் கிராமப்புறங்களில் தான் அதிமுகவுக்கு எப்போதுமே செல்வாக்கு இருந்து வந்தது. இப்போது அதிமுகவில் அவர்களைப் போன்று மக்களை வசீகரிக்கும் தலைவர்கள் இல்லை.

 

எனவே, இப்போதே அதிமுக புள்ளிகளை நிறுத்தி பஞ்சாயத்து தலைவர் பதவிகளை கைப்பற்றி விட வேண்டும். அவர்கள் மூலம் இந்த ஓராண்டில் வாக்காளர்களை கவரும் திட்டங்கள், இலவசங்களை வாரி வழங்கினால், சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று விடலாம் என்று அதிமுக மேலிடம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாம். மேலும் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளையும் பஞ்சாயத்து தலைவர்களிடமே ஒப்படைத்து விட்டால், வேலையும் எளிதாகி விடும் என்ற நினைப்பிலும் அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளதாம்.

 

இதனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ போன்றோர், தங்கள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் உள்ள அதிமுக முக்கியப் புள்ளிகளை வம்படியாக வரவழைத்து, தேர்தலில் நில்லுங்கள். எவ்வளவு செலவானாலும் அதை செய்திறோம். வெற்றி பெற வைப்பதும் எங்கள் பொறுப்பு என்ற ரீதியில் ஆசை வார்த்தைகளைப் பேசி வலை வீசி வருகின்றார்களாம்.

 

ஆளும் கட்சி என்ற கோதாவுடன், பஞ்சாயத்து தலைவர் பதவிகளையும் மொத்தமாக அறுவடை செய்ய அதிமுக போட்டுள்ள இந்த திடீர் பக்கா பிளானால், ஊரில் நமக்குத்தான் செல்வாக்கு.வெற்றியும் பெற்று விடலாம் என்ற மிதப்பில் இருந்த கட்சி சார்பற்ற பலரும் இப்போது பீதியில் உறைந்துள்ளதாகத் தெரிகிறது.

 

அதிமுகவின் இந்த அதிரடி எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடிபோல் கதிகலங்க வைத்துள்ளது என்றும் கூறலாம். ஏனெனில், இந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் திமுக சதி செய்கிறது. திமுகவுக்கு தோல்வி பயம் என்ற ரீதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதற்கொண்டு அமைச்சர்கள் அனைவரும் பேசிப் பேசியே மக்கள் மனதிலும் பதிய வைத்து விட்டனர். அதற்கேற்ப திமுகவும் தேர்தலுக்கு தடை பெற்றுவிட பல வழக்குகளைப் போட்டும் வெற்றி கிட்டவில்லை. இப்போது தேர்தல் நடப்பதும் உறுதியாகி விட்டதால், அதிமுகவின் இந்தப் பிளானும் திமுகவை கதிகலங்க வைத்துள்ளது என்றும் கூறலாம்.


Leave a Reply