உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் ஆரம்பம்…! திமுக மீண்டும் வழக்கு தொடர்வதால் பலரும் தயக்கம்!!

ஊரகப் பகுதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், தேர்தலை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் வேட்பு மனுத்தாக்கல் செய்ய பலரும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

 

தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படாமல் இழுபறியாக இருந்து வந்தது.இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் நெருக்கடியால், கடந்த 2-ந் தேதி ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கு மட்டும் தேர்தலை அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம் . மாநிலம் முழுவதும் உள்ள 36 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில் டிசம்பர் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அட்டவணை வெளியிடப் பட்டது.ஆனால் இந்த தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், வார்டுகள் மறு வரையறை செய்யாதது, இட ஒதுக்கீடு முறையாக அறிவிக்காதது போன்ற காரணங்களைக் கூறி தேர்தலுக்கு தடை விதிக்க திமுக தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

 

இந்த வழக்கில் பரபரப்பான வாதம் நடைபெற்ற நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து ஏற்கனவே அறிவிக்க்ப்பட்ட தேர்தல் அறிவிப்பை வாபஸ் பெற்ற மாநில தேர்தல் ஆணையம் , 27 மாவட்டங்களுக்கான புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி டிசம்பர் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெறும் எனவும், வேட்பு மனு தாக்கல், பரிசீலனை, வாபஸ் தேதிகளில் மட்டும் மாற்றம் செய்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

 

புதிய தேர்தல் அட்டவணைப்படி, ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. 16-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதற்கிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், பல்வேறு குளறுபடிகளுடன் புதிய தேர்தல் தேதியை, மாநில தேர்தல் ஆணையம் அவசரம், அவசரமாக அறிவித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அத்துடன் இந்த தேர்தல் அறிவிப்புக்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் ஸ்டாலின் கூறியிருந்தார்.நேற்று நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும், தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

 

இதனால்,தேர்தலுக்கு எதிராக திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடரப்போவது உறுதியாகியுள்ளது. எனவே தேர்தல் நடைபெறுமா? மீண்டும் தள்ளிப்போகுமா? என்ற சந்தேகமும், குழப்பமும் பல்வேறு தரப்பிலும் இன்னும் நீடிக்கவே செய்கிறது. இதனால் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். ஏனெனில் வேட்பு மனு தாக்கலின் போதே, உடன் வரும் ஆதரவாளர்களுக்கு டாஸ்மாக் சரக்கு, தடபுடல் விருந்து என ஏகத்துக்கும் கவனிக்கவே கணிசமான தொகையை செலவிட வேண்டியுள்ளது. இதனால் வேட்பு மனு தாக்கலுக்கு ஒரு வாரம் அவகாசம் உள்ளதால் பொறுமை காப்போம் என தேர்தலில் போட்டியிட விரும்பும் பலரும் எண்ணுவதால், இன்று மனுத்தாக்கல் ஆரவாரம் இன்றி காணப்படுகிறது.


Leave a Reply