உசிலம்பட்டி 58 -ம் திட்ட கால்வாயில், வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட மறுநாளே உடைப்பு ஏற்பட்டது.கால்வாயில் ஏற்பட்ட உடைப்பிற்கு, எலி, பன்றிகள் குழி பறித்ததே காரணம் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விளக்கம் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதைத் தவிர்க்க, அமைச்சர் செல்லூர் ராஜூ,அணையில் தெர்மாகோல் சீட்களை கொண்டு மூடினார்.அமைச்சரின் இந்தச் செயல் இன்னும் பெரும் ஜோக்காகவே நெட்டிசன்களால் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. அவருக்கு தெர்மா கோல் அமைச்சர் என்றும் பட்டப்பெயர் சூட்டியுள்ளனர்.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி 58 -ம் கால்வாயில் திறந்து விடப்பட்ட வைகை தண்ணீர், கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணானதற்கு எலி, பன்றிகள் தான் காரணம் என்று கூறியிருப்பது ச ர்ச்சையாகியுள்ளதுடன், அப்பகுதி விவசாயிகளை மேலும் வேதனையடையச் செய்துள்ளது.
இந்த 58 -ம் கால்வாய்த் திட்டத்திற்காக உசிலம்பட்டி பகுதி மக்கள் 1980 முதல் போராடி வந்தனர். பல கட்ட போராட்டத்திற்கு பின், 1996-ல், திமுக ஆட்சிக் காலத்தில் இத்திட்டத்திற்கு அனுமதி கிடைத்தது. இத்திட்டத்தில் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள 58 கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் இக் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. சுமார் 100 கோடி செலவில் 20 ஆண்டுகளாக மிக மிக மெதுவாக நடந்த கால்வாய்ப் பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. 40 கி.மீ நீள இந்தக் கால்வாய், மலை முகடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்ததால் 3 இடங்களில் மிக உயரமான அளவில் தொட்டிப் பாலமும் அமைக்கப்பட்டிருந்தது.
பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஆனால் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கால்வாய் உடைப்பை சரி செய்யும் பணிகளும் நடைபெற்றது. ஆனால் இந்த கால்வாய் உடைப்பு சீரமைப்பு பணி ஏனோ தானோ என்ற அளவிலேயே நடத்தப்பட்டது இப்போது அம்பலமாகியுள்ளது.
இந்த ஆண்டும் வைகை அணை நிரம்பிய நிலையில், உசிலம்பட்டி பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்திய பிறகு, 2 நாட்களுக்கு முன் இந்தக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. உசிலம்பட்டி பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சியில் மலர் தூவி வரவேற்றனர். ஆனால் இந்த மகிழ்ச்சி சில மணி நேரங்களே நீடித்தது. கடந்த ஆண்டு உடைப்பு எற்பட்ட அதே இடத்தில் இந்த ஆண்டும் உடைப்பு ஏற்பட்டது.அத்துடன் வீணாகிப் போன தண்ணீர் விளை நிலங்களில் பாய்ந்து பயிர்களையும் சேதமாக்கி விட்டதால் விவசாயிகள் வேதனையும், ஆத்திரமும் அடைந்தனர். இந்த உடைப்பு காரணமாக வைகை அணையிலிருந்து கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கால்வாய் உடைப்பு நடந்த இடத்தைப் பார்வையிட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் நேரில் சென்றார். அவருடன் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மதுரை கலெக்டர் வினய் உள்ளிட்ட அதிகாரிகள் பட்டாளமும், அதிமுக நிர்வாகிகளும் சென்றனர். உடைப்பை பார்வையிட்ட பின், அமைச்சர் உதயக்குமார் கூறிய காரணம் என்ன தெரியுமா? கால்வாய் அமைந்துள்ள பகுதி காடுகள் நிறைந்த பகுதி. இங்கு எலிகளும், பன்றிகளும் அதிகமாக நடமாடுகின்றன. இவை குழி பறித்ததாலேயே கால்வாய் சேதமடைந்து உடைப்பு ஏற்பட்டதற்கு காரணம் என்று உதயகுமார் கூறியது தான் இப்போது கேலி, கிண்டலுக்கு ஆளாகி, விவசாயிகளையும் ஆத்திரமடையச் செய்துள்ளது.
ஏற்கனவே, மதுரையைச் சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜு, வைகை அணை நீர் வீணாகாமல் இருக்க, அணையில் தெர்மா கோல் சீட் போட்டு மூடிய கூத்தை மக்கள் இன்னும் மறக்காமல் ஜோக் அடித்து வருகின்றனர், இப்போது அதே வைகை தண்ணீர் திறக்கப்பட்ட 58 -ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதற்கு, எலிகள், பன்றிகள் தான் காரணம் என்று மதுரையைச் சேர்ந்த மற்றொரு அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியுள்ளது கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. கடந்த ஆண்டே உடைப்பு ஏற்பட்டு, அதை சரி செய்யாத அதிகாரிகளின் அலட்சியத்தால் கால்வாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வருவது நின்று போனதே என்ற வருத்தத்தில் உள்ள அப்பகுதி விவசாயிகளோ, அமைச்சரின் இந்த அலட்சிய விளக்கத்தால் மேலும் வேதனை அடைந்துள்ளனர் என்பதே உண்மை.