உள்ளாட்சித் தேர்தல்: இன்று வேட்பு மனு தாக்கல் உண்டா? இல்லையா? – அதிகாரிகள் குழப்பம்

உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் நடைபெறுமா? இல்லையா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெறும் என்றும், வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் வேட்பு மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

 

இந்நிலையில் தேர்தலை சட்டப்படி முறையாக நடத்தவில்லை என்றும், புதிய மாவட்டங்கள் பிரிவினையால் வார்டு மறுவரையறை, தொகுதி சீரமைப்பு, இட ஒதுக்கீடு போன்ற அனைத்து நடைமுறைகளையும் முழுமையாக முடித்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டும்.அதுவரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பரபரப்பான வாதம் நடைபெற்றது.

அப்போது, புதிய மாவட்டங்கள் பிரிவினை செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைக்க மாநில தேர்தல் ஆணையம் சம்மதம் தெரிவித்தது. ஆனால் திமுக தரப்பிலோ, ஒட்டு மொத்தமாக தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

 

இதனால், நேற்று விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு அறிவித்தது. எனவே இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குமா? இல்லையா? என்ற குழப்பம் அதிகாரிகளிடையும், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமும் ஏற்பட்டுள்ளது.

 

இதற்கிடையே மறு உத்தரவு வரும் வரை வேட்பு மனுக்கள் வாங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வாய்மொழியாக, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply