நெல்லையில் அளவு சரியாக இல்லாத சுடிதாரை மாற்ற மறுத்த துணிக்கடைக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுடிதாரின் விலையான ஆயிரம் ரூபாயும் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்த 11 வயது மகாலட்சுமி தீபாவளி பண்டிகைக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி நெல்லை டவுனில் உள்ள அபிராமி சாரீஸ் அண்ட் ரெடிமேட் கடையில் ஆயிரம் ரூபாய் கொடுத்து அனார்கலி சுடிதார் வாங்கினார். சுடிதாரின் டாப் அளவு சரியாக இருந்தது.
ஆனால் பேண்ட் அளவு சரியாக இல்லை. இதனால் தீபாவளியன்று ஸ்ரீமகாலட்சுமியால் புதிய ஆடையை உடுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. சுடிதாரை மாற்றவேண்டும் என்று கடையில் கேட்டதற்கு அவர்கள் மறுத்து விட்டனர்.
அதனால் சிறுமி மன உளைச்சல் அடைந்ததையடுத்து சிறுமியின் தாயார் கோமதி வழக்கறிஞர் மூலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் துணிக்கடை நிர்வாகம் செய்தது நேர்மையற்ற வாணிபம் மற்றும் சேவை குறைபாடு என்று நீதிபதி தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் மன உளைச்சலுக்கு ஆளான மனுதாரருக்கு நஷ்ட ஈடாக 15,000 ரூபாய்,வழக்கு செலவு ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் சுடிதார் விலை ஆயிரம் ரூபாய் என 21 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பணத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், தவறினால் 6 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் நுகர்வோர் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.