17 பேரின் இறப்பிற்க்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்த காவல் துறையை கண்டித்தும் , அவர்களை விடுதலை செய்யக்கோரியும், அனைத்து கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணமானவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், இறந்தவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை தடியடி நடத்தி கைது செய்தனர். இதனை கண்டித்து திராவிட முன்னேற்ற கழகம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம், சி.பி.எம் விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் காந்திபுரத்தில் தமிழக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பிய வண்ணம் ஊர்வலமாக வந்தனர்
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் கைது செய்தனர்.நியாயம் கேட்டு போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வேண்டும் எனவும் கோசங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 71 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பாதுகாப்பு கருதி இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.