ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணியை ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு தொட்டில் கட்டித் தூக்கிச் சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
பர்கூர் மலைப்பகுதி கிராமமான சுண்டப்பூரைச்சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து 108 ஆம்புலன்சுக்கு அழைத்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மலைப்பகுதியில் பாறைகள் விழுந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக ஆம்புலன்ஸ் வராததையடுத்து குமாரியை கிராமமக்கள் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொட்டில் கட்டி தூக்கி வந்தனர். பின்னர் சாலையில் காத்திருந்த சரக்கு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட குமாரிக்கு பர்கூர் செல்லும் வழியிலேயே பிரசவம் ஆனது.
ஆண் குழந்தை பிறந்த நிலையில் பர்கூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாயும் சேயும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசர காலத்தில் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாவது தொடர்கதையாகி வருவதால் சாலை வசதி செய்து தரவேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.