பணமதிப்பிழப்பு குறித்து தெரியாமல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த முதியவர்களுக்கு சென்னையை சேர்ந்த அறக்கட்டளை 46 ஆயிரம் ரூபாயை நேரில் சென்று வழங்கியது.
திருப்பூர் மாவட்டம் பூமலூரை சேர்ந்த சகோதரிகளான முதியவர்கள் ரங்கம்மாள், தங்கம்மாள் ஆகியோர் பணமதிப்பிழப்பு குறித்து தெரியாமலேயே சுமார் 46 ஆயிரம் ரூபாயை வைத்திருந்தனர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இருவரையும் நேரில் அழைத்து முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினார்.
மேலும் பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கியிடம் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த எவர்வின் பள்ளி அறக்கட்டளையின் தாளாளர் புருஷோத்தமன் முதியவர்களை நேரில் சந்தித்து 46 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தாங்கள் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை மாற்ற முடியாது என்ற வேதனை அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால் உதவி செய்திருப்பதாக புருஷோத்தமன் தெரிவித்தார்.