இளம்பெண்ணின் உயிரை பறித்த பப்ஜி கேம்!
சென்னையில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பப்ஜி கேம் இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு. பலர் இந்த பப்ஜி விளையாட்டிற்கு அடிமை.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் பப்ஜி விளையாட்டை தடை செய்துள்ளன. ஆனால் பப்ஜி மீதான ஆர்வம் குறைந்தபாடில்லை. இந்த விளையாட்டின் தாக்கத்தால் சென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம் நடந்துள்ளது. சென்னை திருவொற்றியூர் காலனி பேட்டையை சேர்ந்தவர்கள் ரகுபதி, தேவி தம்பதி. இருவரும் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர்.
இவர்களின் மூத்த மகள் 18 வயதான வித்யாஸ்ரீ. இவர் திருவொற்றியூர் அரசு கலை கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வித்யாஸ்ரீ படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போனில் அடிக்கடி பப்ஜி கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இதுகுறித்து அவரது தாய் தேதி அடிக்கடி கண்டித்துள்ளார்.
வியாழக்கிழமை கல்லூரிக்கு செல்ல தயாராகாமல் காலையிலேயே செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தார் வித்யாஸ்ரீ .கோபமடைந்த தேவி கல்லூரிக்கு செல்ல வேண்டியதைப் பற்றி கவலைப்படாமல் பப்ஜி விளையாடுகிறாய் என கண்டித்துள்ளார்.

இதையடுத்து கடைக்கு சென்று வருவதாகவும் அதற்குள் கல்லூரிக்கு புறப்பட தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார் தேவி. வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டுள்ளது. நீண்ட நேரம் தட்டியும் வித்யாஸ்ரீ கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் வித்யாஸ்ரீ இருந்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருவொற்றியூர் போலீசார் உடலை
மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வித்யாஸ்ரீயின் தாய் தந்தை மற்றும் தங்கையிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மாணவியின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அவர் பப்ஜி கேம் விளையாடுவது குறித்த ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். வித்யா ஸ்ரீ யின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




