குட்டி யானையின் மரணத்தை தாங்க முடியாமல் தாய் யானை கண்ணீர்!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குட்டியானை இறந்த சோகத்தில் தாய் யானை ஒன்று அப்பகுதியில் வாகனங்கள் மற்றும் கோவிலை உடைத்து சேதப்படுத்தியது. குட்டியானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தாய் யானை அருகே இறந்து கிடந்த குட்டி யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குட்டி யானையின் கழுத்தில் கயிற்றைக் கட்டி அதனை இழுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த தாய் யானை அங்கிருந்த வாகனங்களை சேதப்படுத்தியது.
பின்னர் குட்டி யானையின் உடலை காலால் உதைத்து சாலையின் நடுவே கொண்டு சென்றது. இதனால் இறந்து போன குட்டி யானையின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து வெடிவைத்து தாய் யானையை விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
குட்டி யானை இறந்த இடத்திலேயே தாய் யானை அங்கே நின்று கொண்டிருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் யானையை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




