சபரிமலை செல்ல முயன்ற பெண்கள் மீது ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்து தாக்க முயற்சி; கொச்சியில் பரபரப்பு!!

சபரிமலைக்கு செல்வதற்காக சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் தலைமையில் வந்த பெண்களை, இந்து அமைப்பினர், கொச்சியில் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெண்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்த முயற்சியும் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கலாம் என கடந்தாண்டு உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் பெண்கள் பலர் சபரிமலை செல்ல முயன்றனர்.கேரள அரசும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்துவதாகக் கூறி, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முயற்சித்தது.இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து .போராட்டம் நடத்தியதால் கடந்தாண்டு சபரிமலை வளாகமே போர்க்களமானது. சபரிமலை செல்ல முயன்ற பல பெண்களை தடுத்து நிறுத்திய இந்து அமைப்பினர், சிலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் அரங்கேறியது.

 

மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் தலைமையில் வந்த பெண்களை கொச்சி விமான நிலையத்திலேயே இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். இதனால் விமான நிலையத்தை வெளியே வர முடியாமல் தவித்த திருப்தி தேசாய் குழுவினர் மீண்டும் மும்பைக்கே திரும்பிச் சென்றனர்.ஆனாலும் , கேரள போலீசாரின் பாதுகாப்புடன் பிந்து என்ற கேரளப் பெண் உட்பட சிலர் ஐயப்பனை ரகசியமாகச் சென்று தரிசித்ததாகக் கூறப்பட்டது.

 

இந்நிலையில், சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கலானது. இந்த வழக்குகளில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது. இதனால் 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதுவரை அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசிக்கலாம் என்ற முந்தைய தீர்ப்பு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 15-ந் தேதி மண்டல , மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. இந்த முறை சபரிமலை செல்லும் பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க முடியாது என கேரள அரசு கூறி விட்டது. இதனால் கடந்த 10 நாட்களாக சபரிமலை செல்ல முயற்சித்த பெண்கள் பலர் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

 

இதற்கிடையே கடந்தாண்டு தரிசனம் செய்ய வந்து கொச்சி விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட சமூக ஆர்வலர் திருப்தி தேசாய், 5 பெண்கள் குழுவுடன் இன்று கொச்சி விமான நிலையம் வந்தார். பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கொச்சி காவல் ஆணையர் அலுவலகம் சென்றனர். இந்தக் குழுவினருடன், கடந்தாண்டு சபரிமலை ஐயப்பனை தரிசித்த கேரளாவைக் பிந்து அம்மணியும் சென்றார்.

 

இந்தக் குழுவினர், கொச்சி காவல் ஆணையர் அலுவலகம் வருவதை அறிந்த இந்து அமைப்பினர் அங்கு பெருமளவில் குவிந்தனர். ஐயப்பன் பாடல்களை பாடியபடியே அந்தப் பெண்களை வழிமறித்தனர். அப்போது ஒரு நபர், திடீரென பிந்து மீது பெப்பர் ஸ்பிரேயை பீய்ச்சி அடித்தபடி அவரை தாக்கவும் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்து அமைப்பினர் தொடர்ந்து பாடல் பாடி மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போலீசார் அந்தப் பெண்களை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

 

இந்நிலையில், திருப்தி தேசாய் குழுவினர் சபரிமலை செல்ல, பாதுகாப்பு வழங்க முடியாது என கொச்சி போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து நீதிமன்றத்தை நாடப் போவதாக திருப்தி தேசாய் குழுவினர் கூறியுள்ளதால், கொச்சியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


Leave a Reply