காவல் ஆய்வாளர் இறப்பில் சந்தேகம்…! உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டம்

மத்திய உள்துறை அமைச்சகத்தால் கடந்த ஆண்டு நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களில் நான்காவது இடத்தைப் பிடித்தது புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையம்.

 

இந்த காவல் நிலையத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் விமல் குமார் வியாழக்கிழமை அன்று காலை, காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உடற்கூறு ஆய்வுக்காக இவரது உடல் கதிர்கிராமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் விமல் குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி சாலையில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

 

பின்னர் இறந்த காவல் ஆய்வாளர் உடல் உடற்கூறு ஆய்வுக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கிராமப்புறங்களில் தற்கொலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த காவல் ஆய்வாளர் விமல் குமாரின் தற்கொலை புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Leave a Reply