இந்தியாவுக்கும் வங்கதேசக் கும் இடையே கொல்கத்தாவில் இன்று தொடங்கிய பகலிரவு டெஸ்ட் போட்டியில், வங்கதேசத்தை 106 ரன்களில் சுருட்டியது இந்தியா.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, வங்கதேசம் இடையேயான முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல், வங்கதேச வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து நடையைக் கட்டினர். இதனால் 30.3 ஓவர்களிலேயே 106 ரன்களுக்கு வங்க தேச அணி ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் சத்மன் இஸ்லாம் 29 ரன்கள் எடுத்தார். லிட்டன் தாஸ் 24, நயீம் 19 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுக்க, 4 பேர் ஒற்றை இலக்கத்திலும், 4 வீரர்கள் டக் அவுட்டாகினர்.
இந்தியத் தரப்பில் வேகத்தில் மிரட்டிய இஷாந்த் (5), உமேஷ் யாதவ் (3), ஷமி (2) விக்கெட்டுகளை வீழ்த்தினர். வேகத்திலேயே 10 விக்கெட்டுகளும் வீழ்ந்ததால், சுழல் பந்து வீச்சுக்கு தேவையே இல்லாமல் போய்விட்டது. ஜடேஜா மட்டும் ஒரு ஓவர் வீச, அஸ்வின் ஒரு பந்து கூட வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய தொடக்க வீரர்கள் ரோஹித் (21), மயங்க் அகர்வால் (14) நிலைக்கவில்லை. அடுத்து வந்த புஜாரா (45)வும்,கேப்டன் கோஹ்லி(33)யும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்தியா, 2 விக்கெட்டுக்கு 117 ரன்கள் என்ற வலுவான நிலையில் ஆடி வருகிறது.