இலங்கை: அதிபர் தேர்தலில் தோல்வி – பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ரணில்

இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தும் பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்துள்ளார்.

 

இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசாவும், பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் கோத்தபய ராஜபக்சேவும் போட்டியிட்டனர். இதில் கோத்தபய ராஜபக்சே அமோக வெற்றி பெற்றார்.

 

அதிபர் தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் நெருக்கடி முற்றியது. தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது அவரது பதவியைப் பறித்து விட்டு, மகிந்த ராஜபக்சேவை இடைக்கால பிரதமர் பதவியில் அமர்த்த கோத்தபய ராஜபக்சே முடிவெடுத்து விட்டார் எனவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

 

இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பிரதமர் ரணில் நேற்று சந்தித்த நிலையில், இன்று தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

பிரதமர் ரணிலின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசு கலைக்கப்படும். வேறு எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பலம் இல்லாததால் இலங்கையில் நாடாளுமன்றத்துக்கு விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்றே கூறப்படுகிறது. தேர்தல் நடத்தப்படும் வரை, இடைக்காலப் பிரதமர் பதவியில், தமது சகோதர் மகிந்த ராஜபக்சேவை, அதிபர் கோத்தபய ராஜபக்சே அமர வைத்தாறும் ஆச்சர்யமில்லை என்றே கூறப்படுகிறது.


Leave a Reply