தேனிலவு நாட்களை கழிப்பதற்குள் கணவனின் பிரிவு! விபரீத முடிவெடுத்த பெண்!
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலனை திருமணம் செய்து கொண்ட இளம் பெண்ணுக்கு தேனிலவு நாட்கள் கூட இனிமையாகக் அமையவில்லை என்பது தான் சோகம். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடித்த இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரே மாதத்தில் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார்.
சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் 62 வயதான ராஜா. ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் மருத்துவ அலுவலரான இவரது மகள் ராதா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராதா சென்னை சாலிகிராமத்தில் சேர்ந்த பாலாஜி என்ற இளைஞரை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார்.
இந்த காதலுக்கு ராதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் திடீரென வீட்டை விட்டு வெளியேறிய ராதா நண்பர்கள் உதவியுடன் பாலாஜியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தை ராதாவின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளாததுடன் அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவும் மறுத்துள்ளனர்.
இதனால் சில நாட்கள் நண்பர்கள் வீட்டில் புதுமண தம்பதி தங்கி இருந்துள்ளனர். திருமணமான ஒரு சில நாட்களிலேயே பாலாஜியின் சுயரூபம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. மதுபோதைக்கு அடிமையான பாலாஜி தினமும் குடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் ராதாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளார். இதற்கிடையில் மகனின் திருமணத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த பாலாஜியின் தந்தை மஸ்தான் ராதாவின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு, பாலாஜிக்கும், ராதாவுக்கும் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறி மகனை தம்முடன் அழைத்துச் சென்றுள்ளார். ராதா பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். தந்தையுடன் சென்ற பாலாஜி அதன்பிறகு ராதாவுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் சாலிகிராமத்தில் கணவனை பார்க்க சென்ற ராதாவை, பாலாஜியும் அவரது தந்தையும் அடித்து அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் வீட்டில் தனியாக இருந்த ராதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்து சென்ற ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




