என்னை நீ திமுக கட்சியைச் சேர்ந்தவனா? என்று கேள்வி கேட்பது எவ்வளவு முட்டாள்தனமானதோ அது போலத்தான் மிசாவில் நான் கைது செய்யப்பட்டேனா? இல்லையா? என்ற சர்ச்சையும் முட்டாள்தனமானது என மு.க.ஸ்டாலின் கொதித்தெழுந்துள்ளார்.
1975-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது எமர்ஜென்சியை கொண்டு வந்தார். இதை எதிர்த்த திமுகவினர் பலர் மிசா சட்டத்தில் சிறை சென்றனர். இதில் திருமணமான சில நாட்களிலேயே, மு.க.ஸ்டாலினும் சிறையில் இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக அமைச்சர், மா.பா. பாண்டியராஜன், மு.க.ஸ்டாலின் சிறையில் இருந்தது குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. ஸ்டாலின் சிறை சென்றது மிசாவில் ஒன்றும் கைதாகவில்லை. வேறு ஒரு மோசமான குற்றச்சாட்டிலேயே அவர் சிறையில் இருந்தார் என்று கூறியது, திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினா போராட்டங்களிலும் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த மிசா சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக சேலத்தில் இன்று நடந்த ஒரு விழாவில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார். திமுக முன்னோடித் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் ‘திராவிட இயக்க வரலாற்றில் என் வாழ்க்கைப் பயணம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசிய மு.க.ஸ்டாலின், நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. அவற்றையெல்லாம் திசை திருப்ப ஏன் மிசா பிரச்னையை பேசுகிறீர்கள்.
நான் ஒன்றும் கொலை செய்தோ, கொள்ளை அடித்து விட்டோ சிறைக்கு செல்லவில்லை. நான் சிறைச்சாலைக்கு பயந்தவனுமில்லை .என்னை விமர்சிக்க யாருக்கும் அருகதையும் இல்லை. நான் மிசா சட்டத்தில் இருந்தேனா? இல்லையா? என்பது இப்போதைக்கு தேவையான முக்கியமான விவாதமா?. இது என்னைப் பார்த்து நீ திமுகவா? என்று கேட்பது எவ்வளவு முட்டாள்தனமோ? அது போன்றுதான் மிசா சர்ச்சையும் முட்டாள் தனமானது.
நான் மிசாவில் இருந்தது தொடர்பாக, சில நாட்களாக சில விஷமிகள் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்பது தமிழக மக்களுக்குத் தெரியும்.
எங்களை குடும்பக் கட்சி என்று வதந்தி பரப்பி விமர்சிக்கிறார்கள். ஆனால் குடும்பம், குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தான் திமுக. ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று எமர்ஜென்சியை எதிர்த்த ஒரே இயக்கமும் திமுகதான் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.






