இலங்கை அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு ; இன்று இரவே முடிவுகள் வெளியாகிறது!!

இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடனே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளதால், புதிய அதிபர் யார்? என்பது இன்று நள்ளிரவுக்குள் தெரிந்துவிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 

இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி 9-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் 8-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கியுள்ளது.

இந்த அதிபர் தேர்தலில், பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சுஜித் பிரேமதாசா உள்பட மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் கோத்தபய ராஜபக்சேவுக்கும், சுஜித் பிரேமதாசாவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

 

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள் நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் கோத்தபய ராஜபக்சேவின் பங்கு முக்கியமானது. 10 ஆண்டு காலம் ராணுவ துறை செயலர் பொறுப்பில் இருந்த கோத்தபய, விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் மற்றும் தமிழர்களை, ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்க உத்தரவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பான்மையாக உள்ள சிங்களர்களிடையே கோத்தபயக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவறைந்தவுடன், வாக்கு எண்ணிக்கையும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதனால் இன்று நள்ளிரவுக்குள் முடிவுகள் வெளியாகி, இலங்கையின் புதிய அதிபர் யார்? என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply