இரிடியம் எனக்கூறி பித்தளைக் குடத்தை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி செய்த கும்பல்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இரிடியம் எனக்கூறி பித்தளை குடத்தைத் கொடுத்து 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் அந்தியூரில் விவசாயம் செய்து வருகிறார்.
கரூர் காந்திகிராமம் சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் தம்மிடம் இரிடியம் இருப்பதாகவும் அதனை வீட்டில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும் என்றும் கூறி ராமலிங்கத்திடம் 10 லட்சம் ரூபாய் கேட்டதாக தெரிகிறது. அவர் கூறியதை நம்பிய ராமலிங்கம் சதீஷிடம் பணம் கொடுத்துள்ளார்.
10 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்ட சதீஷ் இரிடியம் எனக்கூறி சிறிய குடம் ஒன்றை ராமலிங்கத்திடம் கொடுத்திருக்கிறார். குடத்தை தனது நண்பர்களிடம் ராமலிங்கம் காட்டியுள்ளார். குடத்தை பார்த்து அவர்கள் அது இரிடியம் அல்ல, பித்தாளை என்று கூறிய பிறகே தான் ஏமாற்றப்பட்டிருப்பது ராமலிங்கத்திற்கு தெரியவந்திருக்கிறது.
இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சதீஷின் கூட்டாளிகள் செந்தில்ராஜ், சேட்டு, காசிநாதன், துரை, மதன், சுரேஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள சதீஸை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




