மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய புல் புல் புயல் வங்கதேத்தையும் கடுமையாக தாக்கியது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 21 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான புல் புல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்திற்கு இடையே கரையைக் கடந்தது. சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்த நிலையில் மேற்கு வங்கத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. புயலில் 2473 வீடுகள் சேதம் அடைந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஜாவித் கான் தெரிவித்துள்ளார். சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
புயல் பாதிப்பினால் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக 10 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தை புரட்டி போட்ட புல்புல் புயல் வங்க தேசத்தையும் தாக்கியது.மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிய நிலையில் புயல் பாதிப்பினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 21 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் புல்புல் புயல் ஆழ்ந்த தாழ்வழுத்த பகுதியாக வலு குறைந்து இருக்கிறது. கொல்கத்தாவில் இருந்து கிழக்கே 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள அது 12 மணி நேரத்தில் தாழ்வழுத்த பகுதியாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.