மாணவியை ஆபாசமாக கிண்டல் செய்த மாணவனை தட்டி கேட்டவருக்கு அறிவாள் வெட்டு!

மூன்று சிறுவர்கள் ஒன்று சேர்ந்து ரேஷன் ஊழியர் ஒருவரை அரிவாளால் வெட்டி வெறியாட்டம் ஆடியுள்ளனர். மானாமதுரை ரயில்வே காலனி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன், மானாமதுரை கூட்டுறவு மண்டல சாலையில் வேலைபார்த்து வருகிறார். பகுதிநேரமாக கேபிள் இணைப்பு கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார்.

 

தான் தொழில் செய்யும் அலுவலகத்தில் இருந்த வெங்கடேஸ்வரனைத்தான் மூன்று சிறுவர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை ஆபாசமாகப் பேசி கிண்டல் செய்துள்ளார்.

 

இதனை வெங்கடேஸ்வரன் தட்டிக் கேட்டுள்ளார். மேலும் சிறுவனின் தந்தையிடமும் இதுபற்றி கூறிய வெங்கடேஸ்வரன் மகனை கண்டித்து வளர்க்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து சிறுவனின் தந்தையும் கண்டிக்க, இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் அந்த விபரீதமான காரியத்தைச் செய்துள்ளான்.

 

தனது நண்பர்களான இரண்டு சிறுவர்களுடன் சேர்ந்து வெங்கடேஸ்வரன் கேபிள் தொழில் செய்யும் அலுவலகத்திற்கு சென்றுள்ளான். அங்கே மூன்று சிறுவர்களும் சேர்ந்து வெங்கடேஸ்வரனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வெங்கடேஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

 

வெங்கடேஸ்வரனை அரிவாளால் வெட்டிய 3 சிறுவர்களும் மானாமதுரை காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளை கிண்டல் செய்ததை கண்டித்த ரேஷன் ஊழியரை மூன்று சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply