காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு அருகே புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த நடராஜன் சென்னை கோயம்பேட்டில் உள்ள பீட்சா கடையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தேவி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் ஒரு விபரீதத்தில் முடிந்துள்ளது. நடராஜனுடன் திருமணம் நடப்பதற்கு முன்பே அந்த கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபருடன் தேவிக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. நடராஜனை திருமணம் செய்து இரண்டு மகள்கள் பிறந்த பிறகும் தேவிக்கும் அந்த நபருக்கும் இடையே இருந்த தவறான தொடர்பு நீடித்து வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன், மனைவி தேவியை கண்டிக்க இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. அதன் உச்ச கட்டமாக தான் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவி தனது இரண்டு மகள்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது மனைவியையும், மகளையும் கண்டுபிடித்து தருமாறு நடராஜன் சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து தனது சொந்த ஊரில் மகள்களுடன் இருந்த தேவியை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கே வைத்து நடராஜனிடமும் தேவியிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது, தான் விரும்பும் நபருடன் வாழ போவதாக தேவி கூறியுள்ளார். இரண்டு மகள்களும் தந்தையுடன் இருக்கப்போவதாக அழுதபடியே கூறியுள்ளனர். போலீசார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தேவி கேட்காத நிலையில் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்த காவல்துறையினர் இரண்டு மகள்களையும் நடராஜனிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து தனது சொந்த ஊர் செல்வதற்காக தேவி சூனாம்பேடு காவல் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். மகள்களையும் தன்னையும் பிரிந்து வேறொரு நபருடன் மனைவி தேவி செல்ல முடிவு செய்ததால் ஆத்திரத்தில் இருந்த நடராஜன் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த தேவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த நடராஜன் தேவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் தேவி ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து தப்பியோட முயன்ற நடராஜனை மடக்கிபிடித்த பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து தேவியை மீட்ட போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு நடராஜனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள்களையும் தன்னையும் விட்டு சென்ற மனைவியை பேருந்துநிலையம் அருகே கணவன் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.