கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உயிரிழந்த யானையின் தந்தங்களை கடத்தி விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மலை கிராமத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் குமார் தனது நண்பர் ஈஸ்வரன் என்பவரின் துணையோடு உயிரிழந்த யானையின் உடம்பில் இருந்து தந்தத்தை வெட்டி எடுத்துள்ளனர். பின்னர் யானை தந்தத்தை விற்க வீரபத்திரன், தாமோதரன், தங்கராஜ், மோகன்ராஜ் உள்ளிட்டோரை அவர்கள் அணுகியுள்ளனர். இந்நிலையில் கார்த்திக் குமாரிடம் இருந்த யானை தந்தத்தை யாருக்கும் தெரியாமல் தங்கராஜ் திருடி கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் யானை தந்தத்தை விற்பனை செய்ய அதை கேரளாவில் தங்கராஜ் பதுக்கி வைத்துள்ளார். இந்நிலையில் யானைத் தந்தம் குறித்து கிடைத்த தகவலையடுத்து தந்தம் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். கேரளாவில் தந்தத்துடன் பதுங்கியிருந்த தங்கராஜன் வனத்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 5 கிலோ எடை கொண்ட இரண்டு தந்தங்களை பறிமுதல் செய்தனர்.