ராமநாதபுரத்தில் முதியோர் உதவித்தொகை வழங்குவதற்காக ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை கண்டித்த மாவட்ட ஆட்சியர் அந்த பணத்தை உரியவருக்கு திருப்பிக் கொடுக்க வைத்தார். மாடக்கொட்டம் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர் முதியோர் உதவித் தொகை கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்ததாக தெரிகிறது.
அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக குமாஸ்தா மாரி என்பவரிடம் தங்கராஜ் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தந்தார். உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை அழைத்து கண்டித்த ஆட்சியர் வீரராகவ ராவ் லஞ்சமாக பெற்ற ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டார். அதன்படி மாரி ஆயிரம் ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்ட முதியவர் தங்கராஜிடம் திருப்பிக் கொடுத்தார்.