காவல்துறையினரைப் பற்றிய தரக்குறைவாக பேசியது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்றாம் தேதி தனியார் விடுதி ஒன்றில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த மீராமிதுன்,காவல்துறையினர் லஞ்சம் வாங்கிக்கொண்டு தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ததாக குற்றம் சாட்டினார்.
பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் காவல்துறையினர் யார் மீது வேண்டுமானாலும் வழக்கு போடுவார்கள் என்றும் அவர் பேசியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட விடுதி ஊழியரையும் மீராமிதுன் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
காவல்துறையினரை தரக்குறைவாக பேசியது மற்றும் தனியார் விடுதி ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மீரா மிதுன் மீது ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.