பரவை முனியம்மா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவமனை

தூள் திரைப்படத்தில் சிங்கம் போல நடந்து வாரான் செல்ல பேராண்டி பாடல் மூலம் தமிழ்த்திரையுலகில் கவனம் பெற்றவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. எண்பதுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ள பரவை முனியம்மா கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

 

கடந்த மூன்று மாதங்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முனியம்மாவுக்கு மருத்துவம் பார்க்க போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை சிகிச்சையைக் கைவிட்டு வீட்டில் வைத்து தங்களால் இயன்ற அளவிலான சிகிச்சையை வழங்கி வருவதாக அவரது தெரிவித்திருந்தார்.

 

அத்துடன் ஏற்கனவே அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த தொகை, மாத்திரை வாங்குவதற்கு செலவாகி விடுகிறது என்பதால் தமிழக அரசு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை ஒன்றையும் விடுத்திருந்தார். மதுரையை சேர்ந்த பரவை முனியம்மா பல திரைப்பட பிரபலங்களுக்கு பரிட்சையமானவராக இருந்த போதிலும் அவருக்கு உதவுவதற்கு எந்த நட்சத்திரமும் முன்வரவில்லை.

இதனை தொடர்ந்து அட்டகத்தி, குட்டிப்புலி போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த அபி சரவணன் நேரில் சென்று உதவி செய்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து பரவை முனியம்மா இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தியும் பரப்பப்பட்டது. இந்த வதந்திகளுக்கு தற்போது முடிவு கட்டும் வகையில் வேலம்மாள் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அதில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மாவிற்கு உரிய மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் இவருக்கு மருத்துவ செலவுகள் அனைத்தையும் வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுகொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply