கல்லூரியில் படித்து முடித்து விட்டு ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு இளம்பெண் தற்போது உயிரோடு இல்லை. பெற்றோர் கதறி துடிக்க இந்த இளம்பெண் உயிரிழந்ததற்கான காரணம் தான் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாலூட்டி செல்லமாக வளர்த்த நாய் தன்னை விட்டு பிரிந்து விடுமோ என்ற மன உளைச்சலில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பெருமாள், நீலா தம்பதி. இவர்களுக்கு கோபால் என்ற மகனும், கவிதா என்ற மகளும் இருந்தனர். கல்லூரியில் படித்து முடித்த கவிதா பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பத்திர எழுத்தர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாய்க்குட்டி ஒன்றை விலைக்கு வாங்கி வந்த கவிதா அதற்கு சீசர் என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.
சீஸரை தனது ஹீரோவாகவே கவிதா நினைக்க அதன் தொடர்ச்சியாகத்தான் ஒரு விபரீத சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. தினமும் இரவு நேரத்தில் நாய் குரைத்த நிலையில் அதனால் அக்கம் பக்கத்தினருக்கு தொந்தரவாக இருந்துள்ளது. இதுகுறித்து கவிதாவின் தந்தை பெருமாளிடம் அவர்கள் கூற பெருமாளும் நாயை வேறு யாரிடமாவது கொடுத்து விடலாம் என முடிவு செய்து உள்ளார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த கவிதா செல்லமாக வளர்த்த நாய் சீஸரை யாரிடமும் கொடுக்கக் கூடாது என தந்தையிடம் சண்டை போட்டுள்ளார். இதனை ஏற்க மறுத்த பெருமாள் நாயை விற்று விடுவது என்ற முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் மனமுடைந்த கவிதா அந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். காலையில் நீண்ட நேரமாகியும் கவிதா உறங்கிய அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.
அங்கே கவிதா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். கதறியழுத பெற்றோர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கவிதா எழுதி வைத்திருந்த அந்த கடிதத்தை படித்தனர்.அதில் அப்பா, அம்மா, தம்பி என்னை மன்னித்துவிடுங்கள் என்றும், தம்பி நமது அப்பா அம்மாவையும் எனது செல்ல நாய் சீசரையும் நன்றாக கவனித்துக் கொள்ளவும் கவிதா அந்த கடிதத்தில் எழுதி வைத்திருந்தார்.
தகவலறிந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய போலீசார் கவிதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். செல்லமாக வளர்த்த நாயை தன்னிடம் இருந்து பிரிக்க நினைத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.