பல்வேறு மோசடிகள் செய்து சிக்கி ஜாமீனில் வெளியே வந்து 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண் கோவையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சேலத்தைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் அவரது மனைவி மன்னார்குடி ஆகியோர் ஈரோட்டில் கடந்த 2002ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் மோசடி செய்தனர்.
ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். அப்போது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 350 பேரிடம் ஆன்லைன் வர்த்தகம், பணம் இரட்டிப்பு, புதிய கணிணி சாஃப்ட்வேர் தயாரிப்பு என ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இருவரும் சென்னை, சேலம், மேற்கு வங்கம், ஹைதராபாத் ,பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்டவர்கள் இடம் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது.
அதன்பிறகு கைதான தம்பதி சிறையில் அடைக்கப்பட்ட 2007 ஆம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்து தலைமறைவான தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு சிபிசிஐடி தனிப்படை போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நீண்ட தேடுதலுக்கு பிறகு கோவையில் வசித்து வந்த மோசடி பெண் மன்னார்குடி போலீசாரிடம் சிக்கியதை அடுத்து கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் வழக்கு தொடர்பாக ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் 15 நாட்கள் சிறை காவலில் மீண்டும் கோவை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள இவரின் கணவர் பிரபாகரன் தேடப்பட்டு வருகிறார்.