பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிட்டேட் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு பாரத் பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருப்பூர், பெருமாநல்லூர் அருகே உள்ள செங்கப்பள்ளி சொர்ண மஹால் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பாரத் பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசன் தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் விஸ்வநாதன், திருப்பூர் மாவட்ட பெட்ரோல் டீலர்ஸ் அசோசியேசன் தலைவர் பரணி நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரத் பெட்ரோலியம் கார்பொரேஷன் லிமிட்டேட்டின் சில்லறை விற்பனை பிரிவு நிர்வாக இயக்குனர் பி.எஸ் ரவி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:தமிழகத்தில் தொழில் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் டீசல் விற்பனை 5 முதல் 10 சதவீதம் குறைந்துள்ளது.
இதனால் டீசல் விற்பனை கடுமையாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதற்கு நாம் என்ன பண்ண வேண்டும் இதனால் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கும், டீலர்களுக்கும் லாபத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் 60 சதவீத டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனை பொருத்தவரை நமது பெட்ரோல் பங்குகளில் தரம் மற்றும் அளவுகள் சரியாக இருக்கும். இதனாலேயே இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 35 முதல் 37 சதவீதம் வரை மார்கெட் ஷேர் உள்ளது. மற்ற மாநிலங்களில் 23 முதல் 28 சதவீதம் வரை தான் உள்ளது.
தற்போது பாரத் பெட்ரோலியம் பங்குகளில் புது சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறோம் அதாவது இன்டெகரேட்டேடு பேமெண்ட் சொல்யூஷன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த மெஷினில் எத்தனை ரூபாய்க்கு டீசல் பெட்ரோல் அடிக்கிறோமோ அது மட்டும் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளும். இதில் எந்த குற்றமும் செய்ய முடியாது. இந்த சிஸ்டம் மார்ச் மாதத்தில் தொடங்கி கடந்த நான்கைந்து மாதத்தில் நிலையாக உள்ளது. தற்போது நெடுஞ்சாலை துறையில் உள்ள பெட்ரோல் பங்குகளிலும் இந்த புதிய சிஸ்டத்தை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.
இதனால் அனாவசியமாக பணப் பிரச்சினை வராது. அதேபோல் கிராமம் மற்றும் சிறு நகரங்களிலும் இதை அறிமுகப்படுத்த உள்ளோம். பணமதிப்பிழப்பிற்கு பின்பு எல்லா பண பரிவர்த்தனையும் இ.பேங்கிங் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிகப் பணப்புழக்கம் உள்ள பகுதியாக பெட்ரோல் பங்குகள் உள்ளது. அதேபோல் ஒரு வாகனம், இரு வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு டீலர்கள் கடன் கொடுப்பதில்லை. இதனால் இவர்கள் எங்கு கடன் வாங்குகிறார்களோ அந்த பகுதியில் உள்ள பங்குகளில் பெட்ரோல், டீசல் அடிக்கிறார்கள்.
இதற்கு தீர்வு காண நாம் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்து அந்த சிறு நிறுவனங்களுக்கு ஸ்ரீராம் கடன் கொடுக்கும். அவர்கள் நம்மிடம் பெட்ரோல் அடிப்பார்கள். கடந்த ஜனவரி மாதம் இதற்கான கையெழுத்து போட்டோம் அதேபோல் கிராம மற்றும் சிறு நகரங்களில் உள்ளவர்கள் ஒரு வீட்டிற்கு ஒரு வாகனமாக வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் வண்டியில் ஆயில் மாற்றுவதற்காக வெளியிடங்களுக்கு தான் சொல்கிறார்கள். இவர்களை நம் பக்கம் இழுக்க நமது பெட்ரோல் பங்குகளில் குயிக் ஆயில் சேஞ்ச் மெஷின் மூலம் ஆயில் மாற்றிக் கொடுத்தால் அவர்கள் நம்மிடமே வருவார்கள்.
இதனால் கம்பெனிக்கும், டீலருக்கும் லாபம் அதிகரிக்கும். இந்த மாத இறுதிக்குள் அனைத்து பகுதிகளுக்கும் ஆயில் மாற்றும் மிஷினை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிடுவோம். அதேபோல் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் பங்குகளில் அனைத்து வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொடுப்போம். நாளடைவில் இந்த செயல்பாடு நின்றுவிட்டது. தற்போது பெட்ரோல் பங்குகளில் வாகனங்களை வாட்டர் சர்விஸ் செய்துதர முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள். பெட்ரோல் பங்குகளிலும் விற்பனை அதிகரிக்கும்.
நம் நாட்டில் அதிக நம்பிக்கை உள்ள நிறுவனமானது வங்கிகள்தான். நாம் பணம் போட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் அதிக பணப்புழக்கம் உள்ள பகுதியாக பெட்ரோல் பங்குகள் தான் உள்ளது. அதனால் இதை பயன்படுத்தி பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் வங்கியும் ஆரம்பிக்க உள்ளோம். தற்போது வங்கிகளில் ஏ.டி.எம் மிஷினில் பணம் கொண்டு போய் வைக்க அதிக பணம் செலவாகிறது. வரும் காலங்களில் ஏ.டி.எம் மிஷின் பயன்பாடு குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது.
இதனால் இ.பேங்கிங் என்ற முறையை செயல்முறைபடுத்த அதிக கவனம் செலுத்துகிறார்கள். வாடிக்கையாளர்களை பெட்ரோல் பங்கிற்கு கொண்டு வந்து சேர்க்கும் யுக்தியை கொண்டுவந்தால் மீதியை டீலர்கள் பார்த்துக்கொள்வார்கள். அதேபோல் இளைஞர்களை கவர சில மாற்றங்களுடன் புதிய டெக்னாலஜி உருவாக்கி அவர்களை கவர மொபைல் மூலம் என்ட்ரி பண்ணிவிட்டு பெட்ரோல் பங்கிற்கு வந்து சில நிமிடங்களில் பணம் செலுத்தாமல் பெட்ரோல் அடித்துச் சொல்லலாம். அதனால் வாடிக்கையாளர்களை குறிப்பாக இளைஞர்களை கவர நவீன, புதிய உத்திகளை கையாண்டு விற்பனையை அதிகப்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் தென்மண்டல சில்லறை விற்பனை பிரிவு தலைவர் இந்திரஜித் சிங், தென்மண்டல சில்லறை விற்பனை பிரிவு திட்ட பொது மேலாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு, பாண்டி மாநில சில்லறை விற்பனை பிரிவு தலைவர் நாகராஜன் ஆகியோர் பேசினார்கள். தொடர்ந்து தமிழ்நாடு பாரத் பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசனின் 24 வது பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பொருளாளர் அருணோதயம் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட பாரத் பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசன் தலைவர் வினோத், செயலாளர் நந்தகுமார், பொருளாளர் மோகன்ராஜ் உள்பட நிர்வாகிகள் செய்து இருந்தனர். நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து பாரத் பெட்ரோலியம் டீலர்ஸ் அதிகமானோர் கலந்துகொண்டனர்.