வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெல்லும் எனவும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கோவை ஈச்சனாரி பகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் வாழ்வும்,பணியும் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புத்தகத்தை வெளியிட்டு பேசிய ஸ்டாலின் புராணத்தில் கண்ணன் தேர் ஓட்டியதை போல, கலைஞர் கருணாநிதிக்கு கண்ணப்பன் காரோட்டினார் என தெரிவித்தார். மேலும், தமிழ் மொழியில் ஆலயங்களில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆகிய சட்டங்களை திமுக கொண்டு வந்த போது இந்து சமய அறநிலைய துறை அமைச்சராக கண்ணப்பன் இருந்தார் என அவர் கூறினார்.

மேலும்,தியாகிகள் நிறைந்த இயக்கமாக திமுக உள்ளது எனவும், அப்படிப்பட்ட இயக்கத்திற்கு நான் தலைவானாக இருப்பது மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்தார். தமிழ் மொழியையும், இனத்தையும் அழிக்க திட்டமிட்டுள்ளனர் எனவும், தமிழ் மொழிக்காக போராடும் இயக்கமாகவும்,தமிழக உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் இயக்கமாகவும் திமுக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும்,பேசிய ஸ்டாலின் தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறியுள்ளது எனவும், ஆட்சி முடிவதற்குள் வெளிநாடுகளை பார்த்து விட வேண்டுமென அமைச்சர்கள் சுற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.நடந்து முடிந்த இரு உலக முதலீட்டாளர் மாநாட்டில் வந்த முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், 2 கோடிக்கு முதலீடு வருமென கூறுவது பொய் எனவும் அவர் கூறினார்.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் முதலீடு வந்தால் சந்தோசம் எனவும், அப்படி வந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடத்த தயார் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும்,வேலூர் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக சிலர் கேலி செய்வதாகவும்,ஒரு வாக்கில் வெற்றி பெற்றாலும் வெற்றி தான் எனவும் அவர் தெரிவித்தார்.கடந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 1.1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக ஆட்சியை பிடித்ததாகவும், இரண்டாயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் ராஜினாமா செய்தால் இந்த ஆட்சி நீடிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் முழுமையாக வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்திருந்தால் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது என அவர் கூறினார். மேலும்,வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெல்லும் எனவும்,அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது எனவும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.






