இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்ட பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான சமையல் போட்டியில் தயாரான உணவு வகைகளை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ் பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை யின் கீழ் 1,224 குழந்தைகள் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்தான கலவை சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் சமையலர்கள், சமையல் உதவியாளர்களை ஊக்குவிக்கும் மாவட்ட அளவிலான சமையல் போட்டி நடத்தப்பட்டது.
அடுப்பில்லா சமையல், எண்ணெய் இல்லா சமையல், இயற்கை உணவு, ஆரோக்கியமான உணவு, சிறுதானிய உணவு, சிற்றுண்டி மற்றும் மாலை நேர உணவு என 7 தலைப்புகளின் கீழ் இப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்கள், 1 நகராட்சி என 12 குழுக்களாக ஒரு குழுவிற்கு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என தலா 2 நபர் வீதம் பங்கேற்கும் வகையில் இப்போட்டி
நடத்தப்பட்டது.
இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.5,000 பரிசுத்தொகை,பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வீரப்பன், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் சிவராமபாண்டியன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயந்தி உட்பட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.