ஏன் மா இத்தனை நாளா கூட்டிப்போக வரல! கதறி அழுத சிறுவன்

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தாயைப் பிரிந்து தவித்து வந்த சிறுவன், அம்மாவிடம் சேர்க்கப்பட்டார். தன்னை ஏன் இத்தனை நாட்களாகக் கூட்டிப்போக வரவில்லை எனக் கூறி சிறுவன் அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.

 

பொள்ளாச்சியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு இரண்டு மனைவிகள். இதில், ஒரு மனைவிக்கு பிறந்த குழந்தையான தருண் என்ற சிறுவனை பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் கடந்த ஆண்டு சுரேஷ் விட்டுச் சென்றார். இதனிடையே பரமேஸ்வரி என்ற பெண் தனது 3 குழந்தைகளுடன் சிறுவன் தருணையும் சேர்த்து பல இடங்களில் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

 

கரூர் ரயில் நிலையத்தில் பரமேஸ்வரி நான்கு குழந்தைகளுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த போலீசார் விசாரித்துள்ளனர்.பின்னர், குழந்தைகள் காப்பகம் மூலம் 4 குழந்தைகளையும் போலீசார் மீட்டுள்ளனர். 3 குழந்தைகளின் பெற்றோர் மதுரையை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்த நிலையில், குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆனால் தருணின் பெற்றோரை கண்டுபிடிக்க சிரமம் ஏற்பட்ட நிலையில் குழந்தைகள் ஆணைக்குழு தலைவர் திலகவதி தருணைப் பற்றி செய்தியாளர்களிடம் கூறினார். அதன்படி, சித்தூர் தாலுக்கா மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், தருண் தனது மகன் என உரிமை கோரினார். குழந்தை நல அலுவலர் திலகவதி வசந்தியிடம் விசாரித்தபோது, வசந்தியின் கணவருக்கு இரு மனைவிகள் என்றும் தருண் தனது கணவருடன் வசித்து வந்ததாகவும் குழந்தை காணாமல் போனது ஊடகம் மூலம் அறிந்து கொண்டதாக கூறினார்.

 

விசாரித்து முறையான ஆவணங்களை பெற்றுக் கொண்டு குழந்தை தருணை, தாய் வசந்தியிடம் ஒப்படைத்தனர்.  தாயைப் பார்த்த குழந்தை, ஏன் இத்தனை நாட்களாக கூட்டிப்போக வரவில்லை என கட்டித் தழுவி அழுதான். சிறுவன் அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.


Leave a Reply