கோவா, கர்நாடகா, கேரளாவை தொடர்ந்து தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.இந்த கனமழையால் அந்த பகுதியில் அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு, வெள்ளத்தில் சிக்கி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே சர்க்கார்பதி வனப்பகுதியில் நாகூர்ஊத்து என்ற இடத்தில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருந்த 22 குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு மேடான பகுதியை நோக்கி ஓடினார்கள்.
இருப்பினும் குஞ்சப்பன் (40), அவரது மனைவி அழகம்மாள் (35), மகள்கள் ஜெயா (15), சுந்தரி (2), மகன் கிருஷ்ணன் (6) மற்றும் அந்தப்பகுதியை சேர்ந்த பாப்பாத்தி (24), தனலட்சுமி (5), லிங்கசாமி (11) ஆகியோர் சிக்கிக்கொண்டனர்.
வெள்ளம் அதிகமாக பெருக்கெடுத்து ஓடியதால் குஞ்சப்பன் உள்பட 7 பேரை மட்டும் வனத்துறையினர் மீட்டனர். 2 வயது குழந்தை சுந்தரி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. அந்த குழந்தையின் நிலை என்ன என்பது தெரியவில்லை.